அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1000 மணி நேரம் மக்கள் சேவைக்கு உறுதிமொழி
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1998 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக நிறுவப்பட்டது. அவர்கள் தங்களின் 20 வது ஆண்டுவிழாவினை சிங்கப்பூரில் அமைந்துள்ள கல்ஷா மண்டபத்தில் ஜனவரி 6, 2019 ஆம் ஆண்டு அன்று மிகவும் விமரிசையாக 350 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அண்ணாமலைப் பல்கலை கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் உலகம் முழுவதிலும் உள்ள முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் சிங்கப்பூரில் உள்ள இப்பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் பல வகையிலும் மதிப்புடையவர்களாக, பணிபுரிபவர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் சிங்கப்பூருக்கு பொருளாதார நிலை, கலாசார நிலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிலைகள் மேலும் பல்வேறு நிலைகளிலும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் துறை அமைச்சர் திரு S.ஈஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழாவின் முக்கிய அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மக்கள் கழகத்துடன் இணைந்து வருடத்திற்கு 1000 மணி நேரம் மக்கள் சேவை புரிவதற்கு உறுதிமொழி ஏற்றுக்கொண்டது. பிறகு அமைச்சர் அவர்கள் மேடையில் உரையாற்றும் போது இச்சங்கம் மேலும் மூன்று வகைகளில் சமூகத்திற்கு பங்காற்றலாம் என்று ஆலோசனை வழங்கினார். முதலாவதாக இந்திய சங்கத்துடன் இணைந்து செயல்படுவது. இரண்டாவதாக இந்திய சமூகத்தைத் தாண்டி சிங்கப்பூர் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவது. மூன்றாவதாக மாறிவரும் தொழில்நுட்பமாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தொழில்நுட்ப ஆற்றல்களை கற்றுக்கொடுப்பது. இந்த தளங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் சமூகமாக முன்னேறலாம் என்று உரையாற்றினார்.
அமைச்சர் திரு S.ஈஸ்வரன் அவர்கள் விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அவர்களின் பல விதமான கேள்விகளுக்கு நேரிடையாக விளக்கமான பதில்களையும் அளித்தார்.
இதன் அடுத்த அங்கமாக குடும்பவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முருகேசன் அவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தார்கள். மற்றுமொரு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் புக்கிட் பஞ்சாங் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர். தியோ ஹோ பின் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்து இவ்விழாவினை மறக்க இயலாத ஓர் உன்னத நாளாக மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
படங்களும், தகவலும்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)
No Comment