கடலுக்கு அப்பாலும் வாழும் கன்னி தமிழ்!
திருமதி: செளந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்
கடலுக்கு அப்பாலும் சிங்கப்பூரில் கன்னி தமிழை கரிசனத்துடன், அரசாங்க உதவியுடன் சிங்கப்பூர் தமிழர்கள் வளர்ப்பதால், ஏப்ரல் மாதம் முழுவதும், அவள் விழாக் கோலம் பூண்டு இருக்கிறாள்.
சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு குட்டித்தீவு. பார்க்கும் இடமெல்லாம் பசுமையும், தூய்மையும் நிறைந்த சிங்கப்பூர் ஒரு நவநாகரீக நாடு. மூர்த்தி சிறிதானலும் கீர்த்தி பெரிது. நாடு சிறியது என்றாலும், சிறந்த திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தியும், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும், சிறப்பாக செயல்படும் நாடு சிங்கப்பூர்.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் ஒன்று. தாய் நாடு, அண்டை நாடு என எந்த நாட்டிலும் இல்லாத அளவு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவுகிறது.
சிங்கப்பூரில், விண்ணிலும் (விமானம்) மண்ணிலும் (நாடாளுமன்றம்) தமிழைக் கேட்கலாம்; பாலர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பு உண்டு; முதுகலைப் பட்டம் மட்டும் அல்ல, முனைவர் பட்டமும் பெற முடியும்; தீபாவளி பண்டிகைக்கு இங்கு அரசு விடுமுறை. தமிழ் கவிதை வாசிக்கலாம், தமிழ் கலையையும் கற்கலாம்; சிங்கப்பூர் நாணயம், அரசாங்க அறிவிப்பு, பொது இடங்களில் தமிழ் மொழியில் எழுதியிருப்பதைக் காணலாம்.
இதில் மேலும் ஒரு முயற்சியாக, மக்களிடம், குறிப்பாக, இளைஞர்களிடம் தமிழை வாழ்வியல் சார்ந்த மொழியாக கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், 2000ஆம் ஆண்டில், தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சின் கீழ், ‘வளர் தமிழ் இயக்கம்’ எனும் ஒர் அமைப்புத் தொடங்கப்பட்டது.
வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், 2007ஆம் ஆண்டு முதல், 13வது ஆண்டாக, ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற கருப்பொருளோடு, ஏப்ரல் மாதம் முழுவதும், ‘தமிழ் மொழி விழா’ சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த வருடம், மார்ச் 24 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ‘தமிழ் மொழி விழா 2019’ நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
மார்ச் மாதம் 24ஆம் தேதி, சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர், திரு: எஸ். ஈஸ்வரன் அவர்கள். தமிழ் மொழி விழா 2019யை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
25 மார்ச் 2019ல் வெளிவந்த தமிழ் முரசு நாளிதள் செய்தியின் படி, தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்ச்ர் திரு: எஸ். ஈஸ்வரன் கூறியதாக நாம் அறிவது, “தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று என்பதில் அரசாங்கத்துக்கு எப்போதும் உறுதியான கடப்பாடு உண்டு. அதைக்கொண்டு தான் பல்வேறு வழிகளிலும், எல்லா இடங்களிலும் வசதிகளை உண்டாக்குகிறோம். தாய் மொழிகள் தொடர்ந்து சிறந்து விளங்கும். அதுவே நம் அடையாளத்துக்கு நல்ல அடித்தளம்” என்பதாகும்.
சிங்கப்பூரிலுள்ள 43 தமிழ் அமைப்புகள், வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பில் இந்த வருடம் மொத்தம் 46 நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. தமிழ் விழா நிகழ்ச்சிகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில், இக்காலத்திற்கு ஏற்புடையதாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம், கருத்தரங்கம், மற்றும் இவற்றோடு இந்திய உணவு பழக்கவழக்கங்கள், நிதி ஆலோசனை, தொழில்நுட்ப பயன்பாடு என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவைப் போன்றவற்றை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சென்ற ஆண்டுகளை நோக்கும் பொழுது, இந்த ஆண்டு இளைஞர்களின் பங்கு அதிகரித்திருக்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் செழித்து வளரும் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி. உள்ளுர் கலைஞர்களுடன், திரு: சுகிசிவம் போன்ற பிரபல பேச்சாளர்களும் இந்த ஆண்டு தமிழ் மொழி விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர்.
திருவள்ளுவர், பாரதிதாசனர் மேலும் சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த திரு: கோ சாரங்கபானி ஆகியோருக்கு விழாக்களோடு, மாணவர்களின் வாதிடும் திறமையை வளர்க்கும் ‘சொற்போர்’, முதன்முறையாக பொமமலாட்டம் என்று பல வகையான நிக்ழ்ச்சிகள் மக்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு: ஆர்: ராஜாராம் அவர்கள், ‘இளைஞர்களுக்கு, தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்பட, வளர்தமிழ் இயக்கம், அதிக கவனம் செலுத்துகிறது’ என்று கூறினார். மேலும், வெளிநாட்டினர் பலரும் இச்சமயம், சிங்கப்பூருக்கு வந்து, இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள் வேண்டும்’ என்றார்.
விழாவின் போது நேரடி கானொளிகள், புகைப்படங்களை @tlf.2019 எனும் இன்ஸ்டகிராம் தளத்தில் பார்வையிடலாம். மேலும் விழா தொடர்பான விவரங்களை, facebook.com/tamillanguagecouncilsingapore, www.tamil.org.sg போன்ற இனையப்பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.
ஆக தமிழ் அன்னை சிங்கப்பூரில் சிறப்பாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.
Photo Courtesy: Tamil Language Council
No Comment